மத்திய அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்குப் பெற 21- 22 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் இல்லத்தில் இன்று நடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட விவரம் பற்றி விளக்குகையில், இதைத் தெரிவித்த மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, "பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற சவாலை நாங்கள் தைரியமாக ஏற்கிறோம், நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
இடது முடிவு துரதிர்ஷ்டவசமானது!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அரசின் மதசார்பற்ற கட்டமைப்பை மீட்டமைப்பதுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கியக் குறிக்கோளாகும். அதன்படி ஜனநாயகபூர்வமாக நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திப்போம் என்று கூறியுள்ளார்.
இடதுசாரிகள் தங்களின் ஆதரவை விலக்கிக்கொண்டது துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ள சோனியா காந்தி, இடதுசாரிகளின் ஆதரவு இல்லாமல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை உருவாக்கியிருக்க முடியாது என்பதை காங்கிரஸ் கட்சி நன்கு அறிந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் உரிய நேரத்தில் ஆதரவளிக்க முன்வந்த சமாஜ்வாடி கட்சிக்கும் சோனியா நன்றி கூறியுள்ளார்.
லாலு பிரசாத் கருத்து!
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள லாலு பிரசாத், இடதுசாரிகளின் ஆதரவு விலக்கல் முடிவை விமர்சிக்க மறுத்ததுடன், "இடதுசாரிகள் சில குழப்பங்களிலும் வற்புறுத்தல்களிலும் சிக்கியுள்ளனர்" என்றார். இடதுசாரிகள் வெளியேறியுள்ளதற்கு, அவர்கள் மீண்டும் வர மாட்டார்கள் என்று அர்த்தமல்ல என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில் அநேகமாக 17-18 அல்லது 21-22 தேதிகளில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டம் கூட்டப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.