மத்திய அரசிற்குத் தேவையான ஆதரவைத் திரட்டுவது, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்கும் தேதி ஆகியவை பற்றி விவாதிப்பதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் டெல்லியில் இன்று கூடியுள்ளனர்.
இக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிவராஜ் பாட்டீல், டி.ஆர்.பாலு (தி.மு.க.), பிரஃபுல் பட்டேல் (தேசியவாத காங்கிரஸ்), மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹ்பூபா முஃப்தி, ஜெ.எம்.எம். தலைவர் ஹெம்லால் மும்மு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில், இந்தியாவிற்கான கண்காணிப்பு ஒப்பந்த வரைவை பன்னாட்டு அணு சக்தி முகமையின் ஆளுநர்களுக்கு வினியோகிக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டதால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது.
இதற்கிடையில், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கான நாடாளுமன்றச் சிறப்புப் கூட்டம் அநேகமாக 22 ஆம் தேதிக்கு முன்பு கூட்டப்படும் என்று மத்திய அயலுறவு இணையமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் காரியக் குழு!
ஐ.மு.கூ. கூட்டத்திற்குப் பிறகு மாலை 5.15 மணியளவில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் காரியக் குழுக் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் அடுத்த மக்களவைத் தேர்தலைச் சந்திப்பதற்கான திட்டம் பற்றி விவாதிக்கப்படுகிறது.
இதையடுத்து நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் தேதி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.