Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இடதுசா‌ரிக‌ளி‌ன் ஆதரவு விலக்கல் கடிதத்தின் முக்கிய அம்சங்கள்!

இடதுசா‌ரிக‌ளி‌ன் ஆதரவு விலக்கல் கடிதத்தின் முக்கிய அம்சங்கள்!
, வியாழன், 10 ஜூலை 2008 (18:39 IST)
மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டதை விளக்கி அந்த கட்சியினர் வெளியிட்டுள்ள அறிக்கையின் சில முக்கிய அம்சங்கள் வருமாறு:

இடதுசாரிகளின் ‌நிப‌ந்தனையான குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில், ஐ.மு.கூ. அரசு 2004-ஆம் ஆண்டு பதவியேற்றது. மதவாதச் சக்திகளை முறியடித்து, அவர்கள் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் மதச் சார்பற்ற அரசியலுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளைக் களைவது என்பதுதான் இத‌ன் நோக்கம்.

இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாக்கவும், தனித்த அயலுறவுக் கொள்கையை வடித்தெடுக்கவும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல கொள்கைகளை அமல்செய்து நாட்டு மக்களை சுமையிலிருந்து விடுவிப்பது‌ம் இதன் நோக்கம்.

பணவீக்கம், விலைவா‌சி உயர்வு போன்ற அழுத்தும் சுமைகள் இருக்கும் நேரத்தில் அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தீவிரமாக முயல்வதன் மூலம், புஷ் நிர்வாகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதையே மன்மோகன் சிங் அரசு தங்களது முதன்மையான கவலை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் இந்தியாவின் முக்கிய நலன்களுக்கு எதிரானது. புஷ்சுடன் செய்து கொண்ட இந்த நம்பகமில்லாத ஒப்பந்தம், அமெரிக்காவுடனான ராணுவ ஒத்துழைப்பு, சில்லறை விற்பனை மற்றும் கல்வித்துறைகளில் அமெரிக்க மூலதனத்திற்கு சலுகைகள் வழங்குவது ஆகியவற்றின் ஒரு மைய அச்சு.

அணு சக்தி ஒப்பந்தம் இந்தியாவிற்கு எரிசக்தி பாதுகாப்பை அளிக்காது. ஏனெனில் அது இந்தியாவின் தனித்த அயலுறவுக் கொள்கைக்கும், பாதுகாப்பு தன்னாட்சிக்கும் பங்கம் விளைவி‌‌க்கும் அமெரிக்க ஹைட் சட்டத்துடன் தொடர்புடையது.

அமெரிக்காவுடனான உறவை‌ப் ப‌‌ற்‌றி‌க் கு‌றி‌ப்‌பிட‌ப்படாத குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை மன்மோகன் கடுமையாக மீறியுள்ளார்.

அணு சக்தி ஒப்பந்தத்தில் இந்தியாவின் பாதுகாப்பு நலன்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் 2006-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உத்தரவாதங்களை அளித்தார். ஆனால் அமெரிக்கா டிசம்பர் 2006-ல் கொண்டு வந்த ஹைட் சட்டம் அதனை ஒன்றுமில்லாமல் அடித்துள்ளது.

இருப்பினும், இடதுசாரிகள் மற்றும் பிற அரசியல் வட்டாரங்கள் இந்த ஒப்பந்தத்தை தீவிரமாக எதிர்த்து வந்தபோதும் 123 ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தைகளை பிரதமர் தொடந்தார். விஞ்ஞானிகள் பலரும் அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து வருகின்றனர்.

தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளை தீவிரமாகக் கடைபிடிப்பதன் மூலம் முந்தைய பா.ஜ.க. தலைமை கூட்டணி ஆட்சியின் அதே கொள்கைகளை கா‌ங்‌கிரசு‌ம் தொடர்ந்து வந்துள்ளது. இதனால், வேளாண் நெருக்கடியும், விவசாயிகள் தற்கொலைகளும், வறுமை, வேலையின்மை பெருகின. இதற்கு நேர் மாறாக செல்வந்தர்களும், பில்லியனர்களும் உருவாகினர்.

அரசு மறுத்த இடதுசாரிகளின் கோரிக்கைக‌ள் கீழ்வருமாறு:

பொது வினியோகத் திட்டமைத்தை மையப்படுத்தி, அனைவருக்கும் ரேஷன் அட்டைகள் வழங்குவது.

அத்தியாவசிய பொருட்களின் முன்பேர வர்த்தகத்தை நிறுத்துவது.

பதுக்கல்காரர்களையும், ஊக வணிகத்தில் ஈடுபடுபவர்களையும் அடக்குதல்.

பெட்ரோலியம் பொருட்களின் மீதான வரிச்சுமையை குறைப்பது.

தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களின் மீது வரிகளை சுமத்துவது.

காங்கிரஸ் அரசு, குறைந்தபட்ச செயல்திட்ட‌த்தை மதிக்காததால், இது போன்ற மக்கள் விரோத அரசிற்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள இடது சாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil