நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திப்பதற்கு முன்பு, இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக பன்னாட்டு அணு சக்தி முகமையை மத்திய அரசு அணுகியுள்ள நடவடிக்கை, "நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மத்திய அரசு இழைத்துள்ள அதிர்ச்சியளிக்கும் துரோகம்" இடதுசாரிகள் கூறியுள்ளனர்.
"அணு சக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக எப்படிப் போராடுவது என்று எங்களுக்குத் தெரியும். அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு முன்னோக்கிச் செல்வதை அரசியல் ரீதியாக இயலாமல் செய்வோம்." என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறினார்.
மத்திய அரசின் நடவடிக்கை உறுதி மீறல் மட்டுமல்ல, "இடதுசாரிகளுக்கு மட்டுமின்றி நாட்டிற்கும், மக்களுக்கும் அளித்த வாக்குறுதிக்கு இழைக்கப்பட்டுள்ள அதிர்ச்சியளிக்கும் துரோகம்" என்றும் அவர் குற்றம்சாற்றியுள்ளார்.
மத்திய அரசு சிறுபான்மை அரசாக மாறிவிட்டது என்பதை நாடறிந்து 24 மணி நேரத்திற்குள், தனித்த கண்காணிப்பு ஒப்பந்த வரைவு பன்னாட்டு அணு சக்தி முகமையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார் காரத்.