Publish Date: Wed, 09 Jul 2008 (20:22 IST)
Updated Date: Wed, 09 Jul 2008 (20:21 IST)
கண்காணிப்பு ஒப்பந்தம்: காரத்திற்கு காங்கிரஸ் பதில்!
புது டெல்லி: பன்னாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு இடையில், இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தில் உள்ள ரகசியமான அணுத் தகவல்களை பொதுவில் வெளியிட முடியாது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் செய்யப்படும் கண்காணிப்பு ஒப்பந்தம் ரகசிய ஆவணம் அல்ல என்று மார்க்ஸிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள்ளதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஸ் திவாரி, "பன்னாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல் உச்சத்தில் இருக்கும் நிலையில், ரகசியமான அணுத் தகவல்கள் அடங்கிய இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்த விவரங்களை பொதுவில் வெளியிட முடியாது" என்றார்.
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வர பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் செய்யப்படும் கண்காணிப்பு ஒப்பந்தத்தின் 15 ஆவது பிரிவு, அந்த ஒப்பந்தத்தை ரகசியமாக வைக்கும்படி செய்கிறது. ஒப்பந்த விவரங்களை பொதுவில் வெளியிடுவதையும் அப்பிரிவு தடுக்கிறது.
இந்த நிலையில், அதுபற்றிய தகவல்களை சம்பந்தமில்லாத நபர்களிடம் இறையாண்மையான அரசால் எப்படிப் பகிர்ந்துகொள்ள முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், "பயங்கரவாத சக்திகள் அணு தொழில்நுட்பங்களுடன் கூடிய அணு பயங்கரவாத சக்திகளாக மாறும் வாய்ப்புக்கள் நமது நாட்டை அச்சுறுத்திவரும் நிலையை இடதுசாரிகள் ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்" என்று கேட்ட திவாரி, எல்லாத் தகவல்களையும் அவர்களுடன் அரசால் ஏன் பகிர்ந்துகொள்ள முடியவில்லை என்பதை இடதுசாரிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் செய்யப்படும் கண்காணிப்பு ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகள் தொடர்பான கேள்விகளை மட்டுமே இடதுசாரிகள் எழுப்பியுள்ள நிலையில், அவர்கள் கேட்காத அணுத் தகவல்களை வெளியிட முடியாது என்று காங்கிரஸ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவையில் நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய ஐ.மு.கூ. அரசு எளிதில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாகவும், நாட்டின் நலன் கருதி அரசிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று அனைவரையும் தாங்கள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் திவாரி கூறினார்.
வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில் நமது நாடு சந்தித்து வரும் எரிசக்தி தட்டுப்பாட்டை எதிர்கொள்ள அணு சக்தி ஒப்பந்தம் உதவும் என்ற சேதியை மக்களிடம் சென்று சொல்லப் போகிறோம் என்றார் திவாரி.