மத்திய அரசிற்குத் தாங்கள் அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கியதை அடுத்து, இடதுசாரி எம்.பி.-ஆன மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி பதவியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்திடம் கேட்டதற்கு, சூழ்நிலையின் அடிப்படையில் தான் அவைத் தலைவர் பதவியில் நீடிக்கலாமா என்பது குறித்து சோம்நாத் சாட்டர்ஜி விரைவில் முடிவெடுப்பார் என்றார்.
குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் பட்டியலில் சோம்நாத் சாட்டர்ஜியின் பெயர் இடம்பெற்றுள்ளதா என்று கேட்டதற்கு, "எங்கள் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவையில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு உறுப்பினரின் பெயரும் பட்டியலில் உள்ளது" என்றார் காரத்.
முன்னாள் மக்களவைத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், சோம்நாத் சாட்டர்ஜிக்குப் பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது முரளி மனோகர் ஜோஷி மக்களவைத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.