காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்கு தாங்கள் ஆதரவளிப்பதைத் தெரிவிக்கும் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் சமாஜ்வாடி கட்சி கொடுத்தது.
குடியரசுத் தலைவரிடம் இடதுசாரிகள் ஆதரவு விலக்கல் கடிதத்தைக் கொடுத்த சிறிது நேரத்தில், சமாஜ்வாடி கட்சியினர் ஆதரவளிப்பதைத் தெரிவிக்கும் கடிதத்தைக் கொடுத்துள்ளனர்.
"குடியரசுத் தலைவரிடம் நாங்கள் கொடுத்துள்ள கடிதத்தில் சமாஜ்வாடி கட்சியின் முத்திரையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள எம்.பி.க்களின் பெயர்ப் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது" என்று சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலர் அமர்சிங் தெரிவித்தார்.
தங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களில் மொத்தம் எவ்வளவு பேர் அரசிற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளனர் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.
இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.பி. பெனி பிரசாத் வர்மாவுடன் தான் காலையில் பேசியபோது, அவர் காங்கிரசுக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்ததாகவும், மற்றொரு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.பி. அடிக் அகமது ஏற்கெனவே காங்கிரசுக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டு உள்ளதாகவும் அமர்சிங் கூறினார்.
உத்தரபிரதேசத்தில் சில ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால்தான் ஐ.மு.கூ. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சமாஜ்வாடி கட்சி விலக்கிக்கொண்டது, இருந்தாலும் அதுபற்றி முறையான கடிதம் எதுவும் குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படவில்லை என்பதை மக்களுக்குத் தெளிபடுத்த விரும்புகிறேன் என்றார் அவர்.
மக்களவையில் 39 எம்.பி.க்களைக் கொண்டுள்ள சமாஜ்வாடி கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசைக் காப்பாற்றும் சக்திகளில் முக்கியப்பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது.