மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்குத் தாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கொடுத்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் தலைமையில் இன்று பிற்பகல் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்ற இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் ஆதரவு விலக்கல் கடிதத்தைக் கொடுத்தனர்.
"நாங்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து, மத்திய அரசிற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதற்கான கடிதத்தை நான்கு இடதுசாரிக் கட்சிகளின் சார்பாகக் கொடுத்துள்ளோம்.
மக்களவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கேட்டுக்கொள்ள வேண்டும் என்ற கடிதத்தையும் நாங்கள் கொடுத்துள்ளோம்." என்று பிரகாஷ் காரத் தெரிவித்தார்.
மக்களவையில் 59 உறுப்பினர்களைக் கொண்டுள்ள இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு விலக்கப்பட்டுள்ளதால், ஆளும் ஐ.மு.கூ. அரசிற்கு ஆதரவளிக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 230 ஆகக் குறைந்துள்ளது.
மக்களவையில் 39 உறுப்பினர்களைக் கொண்டுள்ள சமாஜ்வாடிக் கட்சி மத்திய அரசிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தாலும், மத்திய அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 3 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.
இத்தேவையை எளிதில் சமாளித்து பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக பன்னாட்டு அணு சக்தி முகமையிடம் செல்வதற்கு முன்பு மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரதமரிடம் ஆலோசித்து விட்டுத் தெரிவித்துள்ளார்.