நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்தித்து அதில் வெற்றிபெற்ற பிறகு, இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்ய பன்னாட்டு அணு சக்தி முகமை (ஐ.ஏ.இ.ஏ.) யிடம் மத்திய அரசு செல்லும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இதற்காக ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு முன்னதாகவே, அதாவது ஜூலை 28 இல் நடக்கவுள்ள பன்னாட்டு அணு சக்தி முகமையின் ஆளுநர்கள் குழு கூட்டத்திற்கு முன்பே நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகவலை இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலைவரிடம் அழைப்பு வந்தவுடன் விரைவாக நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு தொடங்கி விடும் என்றார்.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வழக்கம்போல ஆகஸ்ட் 11 ஆம் தேதி துவங்கும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, இடதுசாரிகள் தங்கள் ஆதரவு விலக்கல் அறிவிப்பை வெளியிட்டவுடன், ஜி-8 மாநாட்டில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கைத் தொடர்புகொண்ட பிரணாப் முகர்ஜி, அரசியல் நெருக்கடி குறித்துப் பேச்சு நடத்தினார்.
இதற்கிடையில் அநேகமாக வருகிற 21 ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.