பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சி ஒன்றின் மூலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர உகந்த கட்சி எது என்பது குறித்து முடிவு செய்வதற்காக இன்று மாலை 5 மணியளவில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் எல்.கே. அத்வானியின் இல்லத்தில் பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டம் நடக்கிறது.
"அமெரிக்காவின் நட்பை எதிர்ப்பதன் மூலம் எங்கள் கட்சியின் நிலைப்பாட்டிற்கு இடதுசாரிகள் ஒத்துவர மாட்டார்கள் என்பதால், அவர்களுடன் இணைந்து மத்திய அரசிற்கு எதிராக பா.ஜ.க. வாக்களிக்காது" என்று பா.ஜ.க. தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைத் தாங்கள் எதிர்க்கவில்லை என்றும், அந்த ஒப்பந்தத்தின் தற்போதைய வடிவத்தை மட்டுமே தாங்கள் எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.
இன்று நடக்கவுள்ள தே.ஜ.கூட்டணி கூட்டத்தில், நாளை குடியரசுத் தலைவரை இடதுசாரிகள் சந்தித்த பிறகு பா.ஜ.க. தலைவர்கள் சந்திப்பது பற்றியும் விவாதிக்கப்படுகிறது.