புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியாவிற்கென்று தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்ய பன்னாட்டு அணு சக்தி முகமையை அணுகுவோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்ததை அடுத்து, மத்திய அரசிற்குத் தாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக இடதுசாரிகள் அறிவித்துள்ளனர்.
நாளை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலைச் சந்தித்து தங்களின் ஆதரவு விலக்கல் கடிதத்தை அளிக்க உள்ளதாக டெல்லியில் இன்று நடந்த இடதுசாரிகள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.
பன்னாட்டு அணு சக்தி முகமையிடம் செல்வோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறிவிட்ட நிலையில், 10 ஆம் தேதி நடக்கவுள்ள ஐ.மு.கூ.- இடதுசாரிகள் உயர்மட்டக் குழுக் கூட்டம் அர்த்தமற்றது என்று கூறிய பிரகாஷ் காரத், இவ்விடயத்தில் மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு இடதுசாரிகள் சார்பில் மீண்டும் ஒரு கடிதம் அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறினார்.