இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஜூலை 10 ஆம் தேதி மீண்டும் ஐ.மு.கூ.- இடதுசாரிகள் உயர்மட்டக் குழுவைக் கூட்டிப் பேச்சு நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக பன்னாட்டு அணு சக்தி முகமையை நாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என்பது குறித்து 7 ஆம் தேதிக்குள் (இன்று) பதிலளிக்க வேண்டும் என்று இடதுசாரிகள் எழுதியிருந்த கடிதத்திற்கு மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதிலளித்துள்ளார்.
தனது பதில் கடிதத்தில் பிரணாப் முகர்ஜி என்ன கூறியிருக்கிறார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், பன்னாட்டு அணு சக்தி முகமையை மத்திய அரசு எப்போது நாடப் போகிறது என்ற விவரங்கள் அதில் இல்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.
மேலும், தனது நிலையை விளக்குவதற்காக வருகிற 10 ஆம் தேதி ஐ.மு.கூ.- இடதுசாரிகள் உயர்மட்டக் குழுக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டு உள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
10ஆம் தேதி ஆதரவு விலக்கல்- இடது!
இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்த பார்வார்ட் பிளாக் கட்சித் தலைவர் தேபபிரதா பிஸ்வாஸ், அரசிற்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதற்கான கடிதத்தை இடதுசாரிகள் ஜூலை 10 ஆம் தேதி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் கொடுப்பார்கள் என்றும், இது ஒருமித்து எடுக்கப்பட்ட முடிவு என்றும் தெரிவித்தார்.
ஜப்பானில் நடக்கும் ஜி-8 மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் ஜூலை 9 ஆம் தேதி நாடு திரும்புகிறார். அன்று இடதுசாரிகள் அவரைச் சந்தித்து தங்கள் முடிவை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.