மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தூரில் அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு உத்தரவு இன்று தளர்த்தப்பட்டதால் இயல்பு நிலை திரும்பியது.
அமர்நாத் கோவில் வாரியத்திற்கு நிலம் வழங்கியது தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி வி.எச்.பி. நடத்திய நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தின் போது இந்தூரில் நிகழ்ந்த வன்முறை மதக் கலவரமாக மாறியது.
இக்கலவரங்களில் 6 பேர் கொல்லப்பட்டதுடன் 33 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து கலவரம் நடந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், சில இடங்களில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையும், வேறு சில இடங்களில் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரையும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.
இதனால் இயல்பு நிலை திரும்பி வருகிறது. பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர்.