வளரும் நாடுகள் (ஜி-8) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நாளை ஜப்பான் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை பிரதமர் சந்தித்துப் பேசுகிறார்.
இந்த சந்திப்பின் போது அணுசக்தி ஒப்பந்தத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடர்வது குறித்து மன்மோகன் சிங் பேசுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
7ஆம் தேதி முதல் 9ஆம் தேதிவரை ஜப்பானின் ஹொகைடோஅருகே டொயகோவில் ஜி-8 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க அதிபர் புஷ்ஷூம், பிரதமர் மன்மோகன் சிங்கும் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கூட்டாக அறிக்கை வெளியிட்ட நிலையில், ஜப்பான் சந்திப்பின் போது, ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது குறித்த பேச்சுகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஏஈஏ, அணுசக்தி வழங்கல் நாடுகளின் கூட்டத்தில் இந்தியா பங்கேற்பது குறித்து புஷ்ஷிடம் மன்மோகன் சிங் எடுத்துக் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன், அணுசக்தி வழங்கல் நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளதாகவும், பிரதமர் - புஷ் சந்திப்பின் போது அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றும் அடுத்த கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.