பா.ஜ.க. வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார் என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்க வேண்டும் என்று பிரதமருக்கு எல்.கே.அத்வானி விடுத்த கோரிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ், "அரசிற்கு அளித்து வரும் ஆதரவை இப்போது யாரும் விலக்கிக் கொள்ளவில்லை. பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு எங்கிருந்து வந்தது" என்று கூறியுள்ளது.
ஜி-8 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் செல்லவுள்ள நிலையில் அத்வானி பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார் என்று காங்கிரஸ் பேச்சாளர் திவாரி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.
"நமது நாட்டின் அரசியலிலும், அரசிற்குள்ளும் நிலையற்ற தன்மை ஏதும் ஏற்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவரின் சிந்தனையில் வேண்டுமானால் நிலையற்ற தன்மை இருக்கலாம்.
அணு சக்தி ஒப்பந்தம் என்பது எரிபொருள் பெறுவது குறித்த தேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை. இதில் எந்தக் கட்சி எங்களை ஆதரித்தாலும் நாங்கள் வரவேற்போம்" என்றார் அவர்.