இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கும் விடயத்தில் சமாஜ்வாடிக் கட்சிக்கும், அக்கட்சி அங்கம் வகிக்கும் ஐ.தே.மு. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், "தேச நலனிற்காக எதையும் தியாகம் செய்யத் தயார்" என்று சமாஜ்வாடி கட்சி கூறியுள்ளது.
இதனால் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி உடைவது உறுதியாகி விட்டது.
புது டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலர் அமர்சிங்கிடம், அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்கும் விடயத்தில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கின் நிலைப்பாட்டிற்கு இந்திய தேச லோக் தள் கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் செளதாலா கண்டனம் தெரிவித்துள்ளது பற்றிக் கேட்டதற்கு, "நாட்டின் நலனிற்காக நாங்கள் எதையும் தியாகம் செய்யத் தயார்" என்று கூறினார்.
"இந்த ஒப்பந்தத்தை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமே அங்கீகரித்த பிறகு, இந்த விடயத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கோ அல்லது சோனியா காந்திக்கோ நாங்கள் ஆதரவு அளிப்பதில் கேள்வி இல்லை. ஏனெனில் அது நாட்டின் நலன் சார்ந்தது" என்றார் அவர்.
முன்னதாக இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த செளதாலா, "ஐ.தே.மு. கூட்டணியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவ் ஆரம்பம் முதலே அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து வந்தார். தற்போது காங்கிரசைக் காப்பாற்றுவதற்காக அணு சக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பது என்று அவர் முடிவு செய்துள்ளது வேதனை அளிக்கிறது. சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் தனது மனதை மாற்றிக்கொள்ள காரணம் என்னவென்று தெரியவில்லை. ஒருவேளை இந்த ஒப்பந்தம் நாட்டின் நலனைவிட அவரின் நலனிற்கு முக்கியமானதாக இருக்கலாம்" என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து அமர்சிங்கிடம் கேட்டதற்கு, "ஐ.தே.மு.கூ. உறுப்பினர்கள் எனது நண்பர்கள் என்பதால் அவர்களைப் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை. சமாஜ்வாடி கட்சியைப் பொறுத்தவரை, நாட்டின் நலனிற்கு பெரும் ஆபத்தாக விளங்கும் மதவாத சக்திகளை எதிர்த்துப் போரிடுவது முக்கியமானது என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது, ஆதரவாளர்களுக்கும் எதிரானவர்களுக்கும் இடையிலானது அல்ல. அது, மதவாத சக்திகளுக்கும் மதசார்பற்ற சக்திகளுக்கும் இடையிலானது. காங்கிரஸ் மதசார்பற்ற சக்தி" என்றார்.
யார் அதிக ஆபத்தானவர்!
"அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சென்றால், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் எல்.கே. அத்வானி வருவார். நமது நாட்டிற்கு மிகவும் ஆபத்தானவர் யார்?
அணு சக்தி விவகாரங்களில் டாக்டர் அப்துல் கலாமை விட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் போன்றவர்கள் ஒன்றும் அதிகம் தெரிந்தவர்கள் அல்ல" என்றார் அவர்.
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சிக்குமானால், அரசிற்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று இடதுசாரிகள் எச்சரித்துள்ள நிலையில், கடந்த ஒருவாரமாக அரசியல் மாற்றங்கள் வேகமாக நிகழ்ந்தன.
திங்களன்று அணு சக்தி ஒப்பந்தத்திற்கு தாங்கள் ஆதரவளிக்கத் தயார் என்பதை மறைமுகமாக குறிப்பிட்ட சமாஜ்வாடி கட்சி, அதை வெளிப்படுத்த சில விளக்கங்கள் தேவை என்று கோரியது.
அடுத்த நாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோருடன் சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். இதையடுத்து இன்னும் விளக்கம் தேவை என்று அமர்சிங் கோரினார். பிரதமர் அலுவலகமும் உடனடியாக விளக்கம் அளித்தது.
இதையடுத்து ஜூலை 3 இல் நடந்த ஐ.தே.மு.கூ. கூட்டத்தில், அணு சக்தி ஒப்பந்தம் பற்றி விஞ்ஞானிகளிடம் ஆலோசிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. பின்னர் முலாயம் சிங்கும், அமர்சிங்கும் முனனாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமைச் சந்தித்தனர். அப்போது கலாம், அணு சக்தி உடன்பாடு தேச நலன் சார்ந்தது என்று கூறியுள்ளார்.
பின்னர் நேற்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்த முலாயம் சிங், அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஐ.தே.மு.கூ. உறுப்பினர்களிடமும் சமாஜ்வாடி விவாதித்துள்ளது.
அப்போது தெலுங்கு தேசம் கட்சி, இந்திய தேச லோக் தள் கட்சி ஆகியவை சமாஜ்வாடி கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.