இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை ஆதரித்துள்ள சமாஜ்வாடி கட்சி, பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத சக்திகள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சை விட ஆபத்தானவை என்று கூறியுள்ளது.
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் மீதான மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளிப்பது தொடர்பாகத் தாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ள சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலர் அமர்சிங், நாடாளுமன்றத்தில் அரசிற்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வரும்போது மட்டுமே தாங்கள் நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் அரசைக் காப்பாற்றும் வகையில் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து சமாஜ்வாடி கட்சி முடிவெடுத்திருப்பதற்கு, அக்கட்சி அங்கம் வகிக்கும் ஐக்கிய தேச முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய தேச லோக் தள் கட்சி, தெலுங்கு தேசம் கட்சி ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்துக் கேட்டதற்கு, "காங்கிரஸ் எங்களிடம் ஆதரவு கேட்கவும் இல்லை, நாங்கள் ஆதரவு வழங்குவதாகத் தெரிவிக்கவும் இல்லை" என்று இன்று புது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமர்சிங் கூறினார்.
மேலும், பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத சக்திகள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சை விட ஆபத்தானவை என்றும், மதவாதச் சக்திகள் ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்குத்தான் தாங்கள் முதலில் முக்கியத்துவம் அளிப்போம் என்றும் அவர் கூறினார்.