புகழ்பெற்ற அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தைத் தரிசித்து வணங்க இன்று மேலும் 1,855 பக்தர்கள் பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டனர்.
ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி பவனில் இருந்து 154 சாதுக்கள், 362 பெண்கள் மற்றும் 48 குழந்தைகள் உள்பட இந்த 1,855 யாத்ரிகர்களும் 37 வாகனங்களில் பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை அமர்நாத் நோக்கிப் புறப்பட்டனர்.
இவர்களையும் சேர்த்து இந்த ஆண்டு இதுவரை 39,820 யாத்ரிகர்கள் பகவதி நகர் முகாமில் இருந்து புனித அமர்நாத் சென்றுள்ளனர்.
ஜம்முவிலிருந்து புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.
அமர்நாத் கோயில் வாரியத்திற்கு நிலம் வழங்கப்பட்டது தொடர்பாக நடந்து வரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த கடந்த 1 ஆம் தேதி முதல் ஜம்முவில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவினாலும், போராட்டங்களாலும் அமர்நாத் புனித யாத்திரை பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.