மத்தியில் ஆளும் ஐ.மு.கூ. அரசில் இணைவது என்ற பேச்சிற்கே இடமில்லை என்று சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலர் அமர்சிங் கூறியுள்ளார்.
அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவளிப்பது என்ற தங்களின் முடிவிற்குப் பின்னால் எந்த பேரமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து சிஎன்என்- ஐபிஎன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அமர்சிங், "பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடனான எங்களின் சந்திப்பிற்குப் பின்னால் எந்தவிதமான அழுத்தமோ, மிரட்டலோ, பரிசுகளோ, உடன்பாடோ இல்லை. இதுவரை அரசிற்கு நாங்கள் எந்தவிதமான ஆதரவையும் அளிக்கவில்லை" என்றார்.
மத்திய அரசில் சமாஜ்வாடி கட்சியும் இணையுமா என்று கேட்டதற்கு, " அந்தப் பேச்சிற்கே இடமில்லை' என்ற அமர்சிங், " அரசை ஆதரிக்கிறோமா இல்லையா என்பதை நாங்கள் தெரிவிக்காதபோது அரசில் இணைவது பற்றிய கேள்வி எங்கிருந்து வந்தது" என்றார்.
மத்திய அரசிற்கு தாங்கள் அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்ளப் போவதாக கடந்த ஒரு ஆண்டாக மிரட்டி வரும் இடதுசாரிகள், இதுவரை எதுவும் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.