மத்திய அரசைக் காப்பாற்றுவதற்காக சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் பேரம் பேசியுள்ளதாகக் குற்றம்சாற்றியுள்ள பா.ஜ.க., நாடாளுமன்றத்தை உடனயாகக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்குமாறு இன்று பிரதமருக்குச் சவால் விட்டுள்ளது.
புது டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளர் எல்.கே. அத்வானி, "மத்திய அரசு பலவீனமடைந்து விட்டது. ஆட்சியில் தொடர்ந்து நீடிப்பதற்கான தார்மீக அங்கீகாரத்தையும் இழந்து விட்டது. இதனால் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள எந்தவிதமான பேரத்திற்கும் அரசு தயங்காது" என்று குற்றம்சாற்றினார்.
"நடைமுறையில் எல்லா விதத்திலும் மன்மோகன் சிங் அரசு மக்களவையில் பெரும்பான்மையை இழந்து விட்டது... எனவே அரசு உடனயாக நாடாளுமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்க வேண்டும்" என்றும் அவர் சவால் விடுத்தார்.
முன்னதாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அயலுறவு இணையமைச்சர் வயலார் ரவி, நாடாளுமன்றத்தில் எந்த நேரத்திலும் பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற மத்திய அரசு முயலுமானால், உடனடியாக அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்று 59 எம்.பி. களைக் கொண்டுள்ள இடதுசாரிகள் அறிவித்துள்ளன.
இதற்கிடையில், 39 எம்.பி. களைக் கொண்டுள்ள சமாஜ்வாதி கட்சி காங்கிரசுக்கு ஆதரவளிக்கலாம் என்று கருதப்படுகிறது. அதற்கான பேச்சுக்களும் நடந்துள்ளன.