புனித அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு 39.88 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதென ஜம்மு-காஷ்மீர் மாநில அமைச்சரவை எடுத்த முடிவில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
ஜம்மு-காஷ்மீர் அரசு எடுத்த முடிவிற்கு தடை விதித்திட வேண்டும் என்று கூறி ஜம்மு-காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சித் தலைவர் பீம்சிங் தொடர்ந்த பொது நல மனுவை விசாரித்த நீதிபதிகள் அல்டாமாஸ் கபீர், ஜி.எஸ். சிங்வி ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, அம்மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையையும் நிராகரித்தது.
ஆனால், கலவரம் - ஊரடங்கு சூழல் காரணமாக ஆங்காங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமர்நாத் யாத்திரிகர்கள் தங்கள் புனித யாத்திரையை தொடர உரிய பாதுகாப்பு வழங்குமாறு ஜம்மு-காஷ்மீர் அரசிற்கு உத்தரவிட்டது.
“புனித அமர்நாத் கோயிலிற்கோ அல்லது வைஸ்னோ தேவி ஆலயத்திற்கோ செல்லும் யாத்திரிகர்களுக்கு, அவர்கள் பயணம் முடித்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைவிட்டுச் செல்லும் வரை அம்மாநில உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்” என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
அமர்நாத் கோயிலிற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும், காயமுற்றவர்களுக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையையும் நீதிமன்ற அமர்வு நிராகரித்துவிட்டது. இதில் தாங்கள் உத்தரவிடுவது அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாகும் என்று நீதிபதிகள் கூறினர்.
இந்த வழக்கைப் பயன்படுத்தி அரசியல் லாபம் தேடக்கூடாது என்று மனுதார்ரை நீதிபதிகள் எச்சரித்தனர்.