இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற பன்னாட்டு அணு சக்தி முகமையை எப்போது மத்திய அரசு அணுகப் போகிறது என்பதை திங்கட்கிழமைக்குள் தெரிவிக்கவேண்டும் என்று இடதுசாரி கூட்டணி விதித்த கெடுவை காங்கிரஸ் கட்சி நிராகரித்துவிட்டது.
அரசுக்கு கெடுவிதித்து இடதுசாரிகள் கடிதம் எழுதிய சிறிது நேரத்தில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் அபிஷேக் சிங்வி, “இறையாண்மையுடைய அரசுகளும், கட்சிகளும் இப்படிப்பட்ட கெடுவிற்கு உட்படுத்தப்படுவதில்லை” என்று கூறினார்.
“காங்கிரஸ் கட்சி மூன்று இலக்குகளை நோக்கி பணியாற்றிக்கொண்டிருக்கிறது: நமது நாட்டின் தேச நலனை கருத்தில் கொண்டு அணு சக்தி ஒத்துழைப்பை நாடுகிறது, அதனை நிறைவேற்றிட கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயலாற்றுகிறது, அரசமைப்பு சட்ட அடிப்படையிலான அட்டவணையின் படி தேர்தலை சந்திப்பது” என்று அபிஷேக் சிங்வி கூறினார்.
இதன்மூலம், அணு சக்தி ஒப்பந்தப் பிரச்சனையில் ஆட்சியை இழக்க நேரிட்டால் தேர்தல் சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்பதை அபிஷேக் சிங்வி உறுதிபடுத்தியுள்ளார்.
“எங்களைப் பொருத்தவரை இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் நமது தேச நலனிற்கு அவசியமானது என்று கருதுகின்றோம், நமது நாட்டின் நலனில் அக்கரை கொண்ட கட்சிகளும் எங்களுடைய கருத்துக்களை ஏற்க முன்வந்துள்ளது குறித்து மகிழ்ச்சியடைகின்றோம்” என்று கூறிய அபிஷேக் சிங்வியிடம், சமாஜ்வாடி கட்சியுடனான இந்த உறவு உத்திரப் பிரதேசத்தை நோக்கி விரிவடையுமா என்று கேட்டதற்கு, தேச அளவில் ஏற்படும் ஒத்துழைப்பு மாநில அளவிலும் நீடிப்பது இயற்கைதான் என்று கூறினார்.