ஒரிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயில் திருவிழா தேரோட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 6 பேர் பலியாயினர். 50 பேர் காயமடைந்தனர்.
ஒரிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோயில் திருவிழா இன்று காலை தொடங்கியது. இதில் கலந்துகொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.
ஜெகன்நாதர் கோயிலில் இருந்து சுபத்ரா தேவியின் தேர் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் பெருமளவிலான மக்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவலர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் நெரிசல் ஏற்பட்டது.
சற்றும் எதிர்பாராத விதத்தில் ஏற்பட்ட இந்த திடீர் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். 50க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் பூரி மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த இரண்டு பேர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்வையிட்ட ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் 1 லட்சம் கருணைத் தொகையாக அளிக்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.