சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து, இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்குத் தாங்கள் ஆதரவளிக்கும் விவரத்தைத் தெரிவித்துள்ளார்.
அணு சக்தி ஒப்பந்தம் தேச நலனுக்கு உகந்தது என்று முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்ட சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், அதுபற்றி ஐ.தே.மு.கூ. கட்சிகளின் தலைவர்களுடன் விவாதித்தார். அப்போது, அணு சக்தி ஒப்பந்த விடயத்தில் மத்திய அரசிற்கு ஆதரவளிப்பது என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங், பொதுச் செயலர் அமர்சிங் ஆகியோர் இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தங்கள் முடிவைத் தெரிவித்தனர். அப்போது, மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கியுள்ளார்.
இச்சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமர்சிங், அணு சக்தி உடன்பாடு மீதான பிரதமரின் விளக்கம் தங்களுக்கு முழு திருப்தியளிப்பதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில் முலாயம் சிங்கும், அமர்சிங்கும் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஐ.மு.கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான சோனியா காந்தியைச் சந்திக்கின்றனர். பின்னர் மாலை ஐ.தே.மு.கூ. கட்சிகளுடன் விவாதிக்கின்றனர்.