இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தேசத்தின் நலனிற்கு உகந்தது என்றும், இவ்விடயத்தில் நிலைப்பாட்டை முடிவு செய்யும்போது அரசியலை விட தேச நலனிற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர்களிடம் முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் கூறியுள்ளார்.
அணு சக்தி விடயத்தில் அரசிற்கு ஆதரவளிப்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு, அணு சக்தி ஒப்பந்தம் பற்றி பிரபல விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டறிவது என்று இன்று நடந்த ஐ.தே.மு.கூ. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட பிறகு, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங், பொதுச் செயலர் அமர்சிங் ஆகியோர் அப்துல் கலாம் வீட்டிற்கு மாலை சென்றனர்.
அப்துல் கலாமுடன் ஒரு மணி நேரம் நடத்தப்பட்ட விவாதத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முலாயம் சிங், ''அணு சக்தி ஒப்பந்தம் தேச நலன் சார்ந்தது" என்று அப்துல் கலாம் கூறியதாகத் தெரிவித்தார்.
"மரியாதைக்குரிய அனைவரும் அறிந்த விஞ்ஞானியான அப்துல் கலாமுடன் நாங்கள் நடத்திய விவாதங்கள் குறித்து ஐ.தே.மு.கூ. கட்சித் தலைவர்களிடம் தெரிவிப்போம். நமது நாட்டின் அணுத் தொழில்நுட்பத்தின் தந்தை அவர்" என்றார் முலாயம் சிங்.