இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து பிரதமர் அலுவலகம் அளித்துள்ள விளக்கம் தங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றும், விஞ்ஞானிகளிடம் கலந்தாலோசித்த பிறகு தங்கள் முடிவை அறிவிப்பதாகவும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி கூறியுள்ளது.
புது டெல்லியில் இன்று நடந்த ஐ.தே.மு.கூ. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், "ஐ.தே.மு.கூ. ஒற்றுமையாக உள்ளது. இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த விடயத்தில் மத்திய ஐ.மு.கூ. அரசிற்கு ஆதரவளிப்பது குறித்து விஞ்ஞானிகளிடம் கலந்தாலோசித்த பிறகு முடிவு செய்வோம்" என்றார்.
பின்னர் பேசிய சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலர் அமர்சிங், " அணு சக்தி ஒப்பந்தம் பற்றி பிரதமரிடம் விளக்கம் கேட்டோம். அவர் உடனடியாக விளக்கமளித்தார். இருந்தாலும் விஞ்ஞானிகளுடன் ஆலோசித்த பிறகே முடிவு செய்யப்படும். அதேநேரத்தில் பணவீக்க விடயத்தில் மத்திய அரசிற்கு எதிரான எங்கள் எதிர்ப்பு தொடர்கிறது. எப்போதும் எல்லா விடயங்களிலும் ஐ.தே.மு.கூ. ஒன்றுபட்டு முடிவு செய்யும்" என்றார்.
இந்திய தேசிய லோக் தளக் கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் செளதாலா கூறுகையில், "அணு சக்தி ஒப்பந்தமானது தேசிய விவாதத்திற்கு உட்பட்ட விடயமாகும். அது பற்றி மேலும் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் அளித்துள்ள விளக்கம் எங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்ட விஞ்ஞானிகளுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவு செய்வோம்.
நாங்கள் இடதுசாரிகளின் பக்கமும் சேரவில்லை. பா.ஜ.க. வின் பக்கமும் சேரவில்லை. நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம்" என்றார்.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், " ஐ.தே.மு.கூ. வின் நிலைப்பாடு தெளிவானது. அணு சக்தி உடன்பாட்டின் மீது தேசிய விவாதம் நடத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை" என்றார்.
இதற்கிடையில் இன்று மாலை அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி. பரதன் ஆகியோரை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.