“இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அனைத்து நோக்கங்களும், அது தொடர்பான ஏற்பாடுகளும் முழுமையாக உறுதியளிக்கப்பட்டால்தான் அது ஏற்கப்படும்” என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாகவும், அதனை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் செய்யப்படவுள்ள கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாகவும் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி விடுத்த கோரிக்கையை அடுத்து அது தொடர்பான விளக்கத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
“இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பன்னாட்டு அணு சக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ள நமது நாட்டின் அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருள் இறுதிவரை கிடைப்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு ஏற்கப்படும்” என்று அந்த அறிக்கையில் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் இறுதி செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் பற்றி அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அது தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள சந்தேகங்களுக்கு இவ்வறிக்கையில் பொதுவான விளக்கம் தரப்பட்டுள்ளது.
“இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளின் அடிப்படையிலேயே பன்னாட்டு அணு சக்தி முகமையின் கீழ் நமது அணு உலைகளை கொண்டுவருவது தொடர்கபான வழிமுறைகள் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது” என்று அறிக்கை கூறுகிறது.
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பன்னாட்டு கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும் அணு உலைகளைத் தவிர, நமது நாட்டின் மற்ற அணு உலைகளையோ அல்லது மையங்களையோ அல்லது அணுப் பொருட்களையோ பன்னாட்டு அணு சக்தி முகமை கண்காணிப்பிற்கு எந்த விதத்திலும் உட்பட்டதல்ல என்றும், இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பான அணு ஆராய்ச்சி எந்த விதத்திலும் இதற்கு உட்படுத்தப்படாது என்றும் அந்த அறிக்கையில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுதந்திர முடிவுகளை கட்டுப்படுத்தாது!
அமெரிக்காவுடனான இந்த அணு சக்தி ஒத்துழைப்பு எந்த விதத்திலும் நமது சுதந்திரமான அயலுறவு கொள்கை முடிவுகளையோ அல்லது நமது நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான சுதந்திரத்தையோ கட்டுப்படுத்தாது என்று பிரதமர் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
“ஈரான் நாட்டுடனான நமது உறவு நாகரீக வளர்ச்சியுடனும், காலம் காலமாகவும் தொடர்ந்து வரும் உறவு, அந்தப் பாதையிலிருந்து நாம் விலகிச் செல்லுமாறு எந்த அயல் சக்தியும் நம்மை வற்புறுத்த முடியாது” என்று கூறியுள்ள அவ்வறிக்கை, ஈரான் - பாக்கிஸ்தான் - இந்தியா எரி வாயு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது அந்த உறவை உறுதி செய்யக்கூடியது என்று கூறியுள்ளது.
எரி வாயு ஒப்பந்தம் தொடர்பாக தேச பாதுகாப்பு ஆலோசகர் சமீபத்தில் ஈரான் சென்றதையும், அந்நாட்டு அதிபர் அகமதுனேஜாத் உடன் அதுபற்றி விவாதித்தையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள இந்த விளக்க அறிக்கையின் மீதான தங்களின் கருத்தை இன்று வெளியிடப்போவதாக மார்க்ஸிஸ்ட் கட்சி கூறியுள்ளது.