ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் கடந்த மூன்று நாட்களாக நடந்த கடும் மோதலில், தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டதாகவும், இதில் 11 தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாகவும் ராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
வடக்குக் காஷ்மீரில் கர்நாஹ் என்ற இடத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளைத் தடுக்கும் வகையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை முதல் நடந்த மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இளநிலை அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.
நாஸ்தசுன் எல்லையில் இன்று நடந்த மோதலில் கொல்லப்பட்ட 8 தீவிரவாதிகளுடன் சேர்த்து, பலியான தீவிரவாதிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 தீவிரவாதிகளும் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவரும் நேற்று நடந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்று ராணுவப் பேச்சாளர் கூறினார்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்களும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.