அணு சக்தி உடன்பாட்டு விவகாரத்தில் பரபரப்பான சூழல் நிலவும் நிலையில் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாரும், மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
துபாய் விமான நிலையத்தில் நேற்று மாலை இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேளாண் அமைச்சரும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவருமான சரத் பவார் பன்னாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இரண்டு நாள் ஆண்டு மாநாடு தொடர்பாக துபாய் சென்றுள்ளார்.
அப்போது விமான நிலையத்தில் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்த அவர், அணு சக்தி உடன்பாடு தொடர்பாக ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் குறித்து விவாதித்துள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக, அணு சக்தி உடன்பாட்டை நிறைவேற்றுவதற்கு முன்பு இடதுசாரிகளின் கருத்துக்களையும் கவனத்தில்கொள்ள வேண்டும் என்று சரத் பவார் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.