புது டெல்லியில் இன்று மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்.டி. தேவகவுடாவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி. பரதன் சந்தித்து இந்திய- அமெரிக்க அணு சக்தி உடன்பாடு பற்றித் தங்கள் நிலையை விளக்கினார்.
அணு சக்தி உடன்பாடு விடயத்தில் தங்கள் நிலைப்பாடு என்னவென்றும், அதை ஏன் இடதுசாரிகள் எதிர்க்கின்றனர் என்றும் தேவகவுடாவிடம் தான் விளக்கியதாக, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.பி. பரதன் தெரிவித்தார். இச்சந்திப்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜாவும் பங்கேற்றார்.
இடதுசாரிகள் ஒருவேளை ஆதரவை விலக்கிக் கொண்டால் மக்களவையில் 2 உறுப்பினர்களைக் கொண்ட ம.ஜ.த. வின் ஆதரவை காங்கிரஸ் கோரும் என்று எதிர்பார்க்கப்படும் என்று கருதப்படும் நிலையில் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.