அமர்நாத் கோயில் வாரியத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தைத் திரும்பப் பெற்றதைக் கண்டித்து ஜம்மு- காஷ்மீரில் பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்களில் வெடித்த மோதல்களில் 10 பேர் காயமடைந்தனர்.
வன்முறைகளைக் கட்டுப்படுத்த ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இரண்டாவது நாளாக இன்றும் நீட்டிக்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள முதி என்ற இடத்தில் இன்று தடையை மீறிப் போராட்டம் நடத்தியவர்களை கலைப்பதற்காக காவல்துறையினர் வானை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையும் மீறி வன்முறையில் ஈடுபட்டவர்களின் மீது தடியடி நடத்தப்பட்டது.
நேற்று மூன்று பேர் படுகாயமடைவதற்குக் காரணமான துப்பாக்கிச் சூட்டை நடத்திய காவலர்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று நடத்தப்பட்ட போராட்டங்களால் ஸ்ரீநகர்- பூஞ்ச், ஸ்ரீநகர்- ஜம்மு நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்கும் இடையில் நடந்த மோதல்களில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
முதல்வர் குலாம் நபி ஆசாத், ஆளுநர் என்.என். வோரா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் முஃப்தி சயீத் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.
புனித அமர்நாத் குகைக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்கிச் செல்வதற்காக கட்டடங்கள் கட்டுவதற்காக கோயில் வாரியத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தை திரும்பப் பெறக் கூடாது என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.