காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்கவிருப்பதை உறுதிப்படுத்துவது போல, 'எனது கட்சிக்கு அரசியல் எதிரிகள் யாருமில்லை' என்றும் 'அது (காங்கிரஸ்) ஒன்றும் தீண்டத்தகாத கட்சியல்ல' என்றும் சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.
அவரது கட்சித் தலைவர்களை நாளை சந்திக்கும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், இந்திய- அமெரிக்க அணு சக்தி உடன்பாடு பற்றி விளக்கவுள்ள நிலையில் முலாயம் சிங் யாதவ் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வருகிற 3ஆம் தேதி டெல்லியில் நடக்கவுள்ள ஐ.தே.மு.கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி வந்துள்ள முலாயம் சிங், தத்துவ வேறுபாடுகள் இருந்தாலும் தனது கட்சிக்கு அரசியல் எதிரிகள் யாருமில்லை என்றார்.
காங்கிரசுடன் கூட்டணி பற்றி செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முலாயம் சிங், 'அது (காங்கிரஸ்) ஒன்றும் தீண்டத்தகாத கட்சியல்ல' என்றார்.
முன்னதாக நேற்றிரவு மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்த சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச் செயலர் அமர்சிங், இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தைச் சந்தித்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமர்சிங், நாளை எம்.கே.நாராயணன் விளக்கமளித்த பிறகு இந்திய- அமெரிக்க அணு சக்தி உடன்பாடு பற்றி முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.