அமர்நாத் குகைக் கோயில் வாரியத்திற்கு 39.88 ஹெக்டேர் வனத்துறை நிலத்தை மாற்றித்தரும் ஆணையை ஜம்மு- காஷ்மீர் அரசு ரத்து செய்தது. இதனால், கடந்த 10 நாட்களாக நீடித்து வந்த போராட்டங்களும் வன்முறைகளும் முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வனத்துறை நிலத்தின் மீது உரிமை கோருவதில்லை என்று அமர்நாத் குகைக் கோயில் வாரியம் முடிவு செய்த பிறகு, ஜம்முவில் முதல்வர் குலாம் நபி ஆசாத்தின் இல்லத்தில் அவரது தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நல மாற்ற ஆணையை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கலவரத்தில் ஒருவர் பலி; 33 பேர் காயம்!
இதற்கிடையில் அமர்நாத் குகைக் கோயிலுக்கு வனத்துறை நிலத்தை வழங்கியதை எதிர்த்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் இன்று நடந்த போராட்டங்களில் வெடித்த வன்முறையில் ஒருவர் பலியானதுடன், இரண்டு காவலர்கள் உள்பட 33 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஸ்ரீநகரில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்காம் நகரத்தில் போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காகக் காவல்துறையினர் வீசிய கண்ணீர் புகை குண்டு தாக்கி 70 வயது முதியவரான அப்துல் கனி ஷேக் என்பவர் இறந்தார். இவருடன் சேர்த்து கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
இது தவிரப் பல்வேறு இடங்களில் நடந்த வன்முறைகளில் 2 காவலர்கள் உள்பட 33 பேர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.