தமிழகத்தில் பொது மக்களுக்கும் டீலர்களுக்கும் சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை தட்டுபாடின்றி வினியோகிக்கப்படுவதை உறுதிசெய்யக் கோரும் மனு தொடர்பாக, மத்திய அரசிற்கு தாக்கீது அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க. வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.கே.கங்கூலி, நீதிபதி எஃப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு, 4 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசிற்கு உத்தரவிட்டதுடன், வழக்கை மேல் விசாரணைக்காக ஜூலை 4 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது.
முன்னதாக வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் தனது மனுவில், சர்வதேச சந்தையில் கச்சா விலை உயர்வைக் காட்டி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு உயர்த்தி வருவதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் சாதாரண பெட்ரோல், டீசல் விற்பனையை மட்டுப்படுத்தி, அதிக விலை கொண்ட பிராண்டட் பெட்ரோல் மற்றும் டீசலை வாங்கும்படி பொதுமக்களை மறைமுகமாகக் கட்டாயப்படுத்தி வருகிறது என்று குற்றம்சாற்றியுள்ளார்.