மோசமான வானிலையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமர்நாத் புனித யாத்திரை இன்று மீண்டும் துவங்கியது.
புகழ்பெற்ற அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசித்து வணங்க இன்று மேலும் 3,531 யாத்ரிகர்கள் பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டனர்.
ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி பவனில் இருந்து 619 பெண்கள், 70 குழந்தைகள் உள்பட இந்த 3,531 யாத்ரிகர்களும் வாகனங்களில் பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை அமர்நாத் நோக்கிப் புறப்பட்டனர்.
இவர்களையும் சேர்த்து இந்த ஆண்டு இதுவரை 30,593 பதிவு செய்யப்பட்ட யாத்ரிகர்கள் புனித அமர்நாத் சென்றுள்ளனர். பனி லிங்கத்தை இதுவரை 3,78,987 யாத்ரிகர்கள் தரிசித்து வணங்கியுள்ளனர்.
ஜம்முவிலிருந்து புறப்பட்டும் பக்தர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைகின்றனர்.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள இப்பகுதியில் செல்லும் யாத்ரிகர்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பை வழங்கிவருகிறது மத்திய கூடுதல் காவற்படை.