அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தால் ஆதரவு விலக்கிக்கொள்ளப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு டெல்லியில் இன்று கூடி ஆலோசனை நடத்தி வருகிறது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் காரத், அமெரிக்க அதிபர் புஷ்ஷிற்கு அளித்த வாக்குறுதிப்படி அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்தால், அது இந்த நாட்டை 50 ஆண்டுகளுக்கு முடக்கிவிடும் என்று கூறினார்.
தங்கள் முடிவில் சமரசம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று கூறிய பிரகாஷ் காரத், அணு சக்தி ஒப்பந்தத்தால் இந்தியாவின் அயலுறவுக் கொள்கை பாதிக்கப்படும் என்றும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பிரதமர் மன்மோகன் சிங் தவறிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.