Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவிழ்கிறது ஜம்மு-காஷ்மீர் அரசு!

கவிழ்கிறது ஜம்மு-காஷ்மீர் அரசு!
, சனி, 28 ஜூன் 2008 (22:04 IST)
யாத்திரிகர்கள் தங்கிச் செல்ல அமர்நாத் கோயிலின் நிர்வாகத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் அரசின் நடவடிக்கையை எதிர்த்துவந்த கூட்டணிக் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இதனால் காங்கிரஸ் தலைமையிலான அம்மாநில அரசு கவிழ்கிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியில் உள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் முதல்வராகவும், மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் துணை முதல்வராகவும் இருந்தனர்.

இந்த நிலையில், புனித அமர்நாத் செல்லும் யாத்திரிகர்கள் தங்கிச் செல்ல வசதி செய்து கொடுக்க 39 ஏக்கர் நிலத்தை கோயில் நிர்வாகத்திற்கு அரசு அளிக்க முன்வந்தது. இதனை எதிர்த்து அம்மாநிலத்தில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

காஷ்மீரின் பல பகுதிகளில் இன்று நடந்த போராட்டத்தின் காரணமாக வன்முறை வெடித்தது. வன்முறையிலும், கலவரத்தை அடக்க காவல் துறையினர் துப்பாக்கிச் சூட்டிலும் 87 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தனது கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரான மெபூபா முஃப்தி இன்று மாலை ஆலோசனை நடத்தினார். ஆட்சிக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொள்வதென இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மெபூபா, அரசுடன் உற்ற உறவை “மானசீக அடிப்படையில் துண்டித்துக் கொள்வதா” அறிவித்தார்.

87 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 18 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 21 உறுப்பினர்கள் உள்ளனர். சுயேச்சை உறுப்பினர்கள் 8 பேரின் ஆதரவு அரசிற்கு உள்ளது.

ம.ஜ.க. ஆதரவை விலக்கிக்கொண்டுவிட்டதால் பெரும்பான்மை இழந்த காங்கிரஸ் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. தனது கட்சியின் முடிவை ஆளுநருக்கு தெரியப்படுத்திவிட்டதாக மெபூபா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil