இந்தியா - பாக்கிஸ்தான் இடையிலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த நல்லுறவை ஏற்படுத்தவும் உகந்த சூழ்நிலை நிலவுகிறது, இதனைத் தவறவிட்டால் இழப்பு இரு நாடுகளுக்கும்தான் என்று பாக்கிஸ்தான் அயலுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தியா - பாக்கிஸ்தான் இடையிலான நம்பிக்கை ஏற்படும் முயற்சிகளைத் தொடர, இந்தியத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வந்துள்ள பாக்கிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா முஹம்மது குரேஷி, தலைநகர் டெல்லியில் அந்நாட்டிற்கான இந்தியத் தூதர் ஷாஹித் மாலிக் நேற்றிரவு அளித்த விருந்தில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
“இந்தியா - பாக்கிஸ்தான் இடையிலான அமைதி முயற்சிகளுக்கு இரு நாடுகளின் அரசியல் கட்சிகளும், மக்களும் ஆதரவாக உள்ளனர். எனவே, நட்புறவை மேம்படுத்திக் கொள்வதற்கு இதுவே சிறந்த தருணம்” என்று குரேஷி கூறினார்.
“இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டிட வேண்டும். இந்த வாய்ப்பைத் தவற விட்டால் இழப்பு இரு நாடுகளுக்கும்தான்” என்றும் கூறிய குரேஷி, “தீர்வை நோக்கிய அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு பாக்கிஸ்தான் தயாராக உள்ளது” என்று கூறினார்.
பிரதமர் மன்மோகன் சிங், அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை இன்று காலை சந்தித்துப் பேசிய அமைச்சர் குரேஷி, ”உலகம் மாறிவிட்டது, ஐரோப்பா மாறிவிட்டது. ஆசியான் அமைப்பை முன் உதாரணமாக்க் கொள்ளவேண்டும். நம் இரு நாடுகளுக்கு இடையிலான பொதுவான அம்சங்களின் மீது நற்புறவை மேம்படுத்த வேண்டும், அதன் மூலம் கடந்த 60 ஆண்டுகளாக இரு நாடுகளில் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் திறனை வெளிக்கொணர வேண்டும்” என்று கூறியுள்ளார்.