எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்சனையில் சந்தேகத்திற்கு இடமின்றிச் செயல்பட வேண்டும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இரு தரப்பிற்கு இடையிலான 5 ஆவது கட்ட அமைதிப் பேச்சை ஜூலை 21 ஆம் தேதி டெல்லியில் துவங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புது டெல்லியில் இன்று தாங்கள் நடத்திய பேச்சிற்குப் பிறகு கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர்.
நமது பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் செல்வதற்கான பயணத் தேதிகள் பற்றியும் இரு தரப்பும் கலந்து முடிவு செய்ய உள்ளன.
மேலும், இந்தியா- பாகிஸ்தான் இடையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் வழியாக டிரக், பேருந்து, வர்த்தக வானகங்கள் போக்குவரத்தை அனுமதிப்பது தொடர்பாக உறுதியான முடிவை எடுப்பதற்கான, நம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்பச் செயற்குழுக் கூட்டத்தை ஜூலை 10 ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் நடத்த நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இக்கூட்டத்தில், கார்கில்- ஸ்கர்து இடையில் பேருந்து சேவையைத் துவங்குவது, பூஞ்ச்- ரவலகாட் மற்றும் ஸ்ரீநகர்- முஷாஃபராபாத் பேருந்து சேவை ஆகியவற்றை அதிகரிப்பது, ஸ்ரீநகர்- முஷாஃபராபாத் இடையில் டிரக் சேவையைத் துவங்குவது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளன.
மெட்ரோ ரயில் போன்ற அதிவிரைவுப் போக்குவரத்து, அனல்மின் நிலையம், காற்றாலை உள்ளிட்ட அம்சங்களில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கவும், தங்கள் திட்டக் குழுக்களுக்கு இடையில் தொடர்ச்சியான பேச்சு நடத்தவும் ஒரு நிறுவன கட்டமைப்பை ஏற்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
நட்புறவுகளை மேம்படுத்த இதுவே சரியான நேரம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளதுடன், அமைதி, நட்புணர்வு உள்ளிட்ட நல்லுறவுகளை மேம்படுத்தவும், குறிப்பாக வர்த்தகத் துறைகளில் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்பை ஊக்குவிக்கவும் இன்று நடந்த பேச்சில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.