ஜம்மு- காஷ்மீரில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டம் காரணமாக, அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பகவதி நகர் யாத்ரி பவன் முகாமில் இருந்து புனித அமர்நாத் குகைக் கோயிலிற்குச் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வனத்துறை நிலம் அமர்நாத் குகைக் கோயில் வாரியத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து நடக்கும் போராட்டங்களால் பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறினர்.
கடந்த 17 ஆம் தேதி யாத்திரை தொடங்கியது முதல், மூன்றாவது முறையாகத் தற்காலிமாக நிறுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மோசமான வானிலை காரணமாக 20 ஆம் தேதியும், நெரிசலின் காரணமாக 25 ஆம் தேதியும் யாத்திரை நிறுத்தப்பட்டது.
இமயமலையில் 3880 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் புனி அமர்நாத் குகைக் கோயில் பனி லிங்கத்தை இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசித்துள்ளனர்.