இடதுசாரிகளின் நோக்கம் சேவை செய்வதல்ல; மதவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதே ஆகும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
அஸ்ஸாம் தலைநகர் கெளகாத்தியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தங்களின் அரசியல் நோக்கம் சேவை செய்வது என்று இடதுசாரிகள் நினைத்துக் கொண்டிருப்பது தவறு. மதவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதே அவர்களின் நோக்கம். அதற்காகவே அவர்கள் பாடுபட்டு வருகின்றனர்." என்றார்.
"அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவிடம் இருந்து நாம் அணு சக்தியை வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதன்மூலம் அதற்கான கதவுகள் மட்டுமே திறந்து வைக்கப்படும்.
இந்த ஒப்பந்தத்தால் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு உலக அரங்கில் இந்தியா மிகவும் இளைய நாடாகத் திகழும்." என்றார் அவர்.
அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவது தாமதமாகி வருவதால் பிரதமர் அதிருப்தியில் இருக்கிறாரா என்று கேட்டதற்கு, எந்த பிரதமராக இருந்தாலும் இதுபோன்ற சூழலில் அவ்வாறே இருப்பார் என்றார் மொய்லி.
"அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது காங்கிரஸ் கட்சியின் நோக்கமல்ல. நாட்டின் நலனுக்கு இது உகந்தது. இந்த விவகாரத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தெளிவாகவே இருக்கிறது.
முந்தைய பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் அணு சக்தி ஒப்பந்தத்தை கொண்டு வரும் முயற்சிகள் தொடங்கப்பட்ட.ன ஆனால், தற்போது தனது சுய லாபத்திற்காக பா.ஜ.க. அரசியல் ஆக்குகிறது. பார்வையாளர் மாடத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. இது பொறுப்பற்ற செயல்." என்றும் மொய்லி குற்றம்சாற்றினார்.