இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்வு வரும் என்று மத்திய அரசு இன்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அணு சக்தி உடன்பாட்டை நடைமுறைப்படுத்த தேவையான காலம் குறைவாகவே உள்ளது என்று குறிப்பிட்ட மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இவ்விடயத்தில் பல்வேறு தரப்பினரின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும் என்றார்.
"சம்பந்தப்பட்ட எல்லா கட்சிகளுடனும் நாங்கள் பேசி வருகிறோம். இதில், அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு விரைவில் வரும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று புது டெல்லியில் பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷியுடன் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் அணு சக்தி உடன்பாடு பற்றிக் கேட்டதற்குக் கூறினார்.
"காலம் குறைவாகவே உள்ளது என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்றும் அவர் தெரிவித்தார்.