புது டெல்லி: அமெரிக்கா கொடுத்துவரும் நிர்பந்தத்தின் காரணமாக - அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் - அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளே தற்பொழுது உருவாகியுள்ள அரசியல் நெருக்கடிக்குக் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாற்றியுள்ளது.
இந்திய அரசியலில் அணு சக்தி ஒப்பந்தத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், மார்க்சிஸ்ட் கட்சியின் 'மக்கள் ஜனநாயகம்' இதழில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
அணு சக்தி உடன்பாடு நிறைவேற அமெரிக்கா விதித்த காலக்கெடு நெருங்கிவருவதால், உடன்பாட்டை எப்படியாவது நிறைவேற்றிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் முயற்சித்து வருகிறார். இதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி அவர் யோசிக்கவில்லை.
சர்வதேச அணு சக்தி முகமையுடன் பேச்சு நடத்துவோம், ஆனால் தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெற மாட்டோம் என்று 2007 நவம்பரில் இடதுசாரிகளிடம் மத்திய அரசு உறுதியளித்தது. தற்போது அதை மறந்துவிட்டு சர்வதேச அணுசக்தி முகமையுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள தீவிரமாக முயற்சிக்கிறது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டால் அணு மூலப்பொருட்களை விற்கும் நாடுகள் குழுவுடன் (என்.எஸ்.ஜி.) ஒப்பந்தம் ஏற்பட அமெரிக்கா வழிவகை செய்யும். அதன்பிறகு அமெரிக்காவுடனான அணு சக்தி உடன்பாடு தானாக நடைமுறைக்கு வந்துவிடும்.
இந்த உண்மையை மறைக்க இடதுசாரி கட்சிகளிடம் அரசு வேறுவிதமாகக் காரணம் கூறி ஏமாற்றி வருகிறது.
ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் அணு சக்தி உறவைத் தொடர சர்வதேச அணு சக்தி முகமையுடன் ஒப்பந்தம் மேற்கொள்வது அவசியம். இதனால் முதலில் தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம். அமெரிக்காவுடனான அணு சக்தி உடன்பாடு குறித்துப் பின்னர் முடிவெடுக்கலாம் என்று கூறுகிறது.
உண்மை அதுவல்ல. இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறுவதற்கான 'பாஸ்போர்ட்'.
எனவே மீண்டும் ஒருமுறை எச்சரிக்கிறோம். சர்வதேச அணு சக்தி முகமையுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சித்தால் மன்மோகன் அரசு ஆட்சியில் நீடிக்க முடியாது.
இவ்வாறு பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.