வனத்துறை நிலத்தை ஸ்ரீ அமர்நாத் குகைக் கோயில் வாரியத்திற்கு வழங்குவதைக் கண்டித்து காஷ்மீரில் பல்வேறு இடங்களில் மூன்றாவது நாளாக இன்றும் நீடித்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது.
ஸ்ரீநகர் உள்படப் பல்வேறு பகுதிகளில் கல்வீச்சு போன்ற வன்முறைகளில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்தக் காவலர்கள் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியதுடன், வானை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
கடந்த 1990 ஆண்டில் இருந்து, காஷ்மீர் மக்கள் பெருமளவில் திரண்டு போராட்டங்களை நடத்துவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 ஆம் தேதி முதல் நடந்துள்ள வன்முறைகளில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மத்திய ரிசர்வ் காவல் படையினர் ஒருவர், காவலர் ஒருவர் உள்பட 250க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஸ்ரீநகரில் இன்று முக்கியச் சாலைகளில் வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக காவலர்கள் வானை நோக்கிப் பல சுற்றுக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டையும் மீறி மீண்டும் மீண்டும் கூடிய போராட்டக்காரர்கள் காவலர்களின் மீது கற்களை வீசியதுடன், சுதந்திரம் தொடர்பான முழக்கங்களையும் எழுப்பினர். அவர்களின் மீது பல சுற்று கண்ணீர் புகை குண்டுகளை காவலர்கள் வீசினர்.
இதையடுத்து கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். குறிப்பாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.