வளர்ந்த நாடுகளில் உயிரி- எரிபொருளின் தேவை அதிகரித்துள்ளதே உலகளவில் உணவு விலை உயரக் காரணம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வளரும் நாடுகளில் வசிக்கும் மக்கள் சத்தான உணவுகளை அதிகமாகச் சாப்பிடத் துவங்கியுள்ளதே உணவு தானிய விலை உயர்விற்குக் காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அபாண்டமான பழி சுமத்தியுள்ள நிலையில், இந்த ஆய்வு முடிவு குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் உணவு விலை அதிகரிப்பிற்கு 30 விழுக்காடு காரணம் உயிரி- எரிபொருள் என்றும் இதனால் 30 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் ஆக்ஸ்ஃபாம் இன்டர்நேஷனல் நிறுவனம் இன்று டெல்லியில் வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.
வளர்ந்த நாடுகளின் உயிரி- எரிபொருள் தேவையால் உணவுப் பாதுகாப்பின்மையும் பணவீக்க அதிகரிப்பும் மட்டும் ஏற்படவில்லை, ஏழை நாடுகளை அதிக நெருக்கடிக்கு உள்ளாக்குவதன் மூலம் சுமார் 290 கோடி மக்களின் வாழும் தகுதியை உணவுப் பற்றாக்குறையின் மூலம் பறிக்கிறது என்று "மற்றொரு அவஸ்தையான உண்மை" என்ற அந்த ஆய்வு கூறுகிறது.
"பசியையும் வறுமையையும் அதிகமாக்குவதுடன் பருவநிலை மாற்றத்தை வேகப்படுத்தும் பணிக்குத்தான் உயிரி- எரிபொருள் கொள்கைகள் உண்மையிலேயே உதவுகின்றன" என்று ஆய்வின் ஆசிரியர் ராப் பைலே கூறினார்.
தற்போதுள்ள உயிரி- எரிபொருள் தேவை இப்படியே தொடருமானால், வறுமையும் பசியையும் ஒழிப்பதற்கான புத்தாயிரமாண்டு மேம்பாட்டுக் குறிக்கோளான 2025 ஆம் ஆண்டில் இன்னும் 600 கோடிப் பேர் பசியுடன் இருப்பர் என்றும் அவர் எச்சரித்தார்.