மின்னணு சிப்புகளில் தகவல்கள் பதியப்படும் இ-பாஸ்போர்ட் திட்டத்தை மத்திய அரசு இன்று துவக்கியது.
இதனால் போலி பாஸ்போர்ட்டுகள் ஒழிவதுடன் குடியேற்ற மற்றும் சுங்க அதிகாரிகளின் பணிகளும் இலகுவாகும்.
தலைநகர் டெல்லியில் இன்று நடந்த விழாவில் இ- பாஸ்போர்ட்டின் முதல் பிரதியை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பெற்றுக் கொண்டார்.
அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மட்டும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் அடுத்த மாதம் முழுமையான செயல்பாட்டிற்கு வரும்.
பொது மக்களுக்கான இ- பாஸ்போர்ட்டுகள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வினியோகிக்கப்படும்.
வருகிற 2010 ஆம் ஆண்டிற்குள் 80 லட்சம் இ- பாஸ்போர்ட்டுகள் வினியோகிக்கப்படும் என்று அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
சர்வதேசத் தரத்துடன், அடையாள அட்டை வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இத்தகைய பாஸ்போர்ட்டுகளால் பாதுகாப்பு அத்துமீறல்களும், போலிகளும் அறவே ஒழியக்கூடும் என்றார் அவர்.
உலகில் இதுவரை மொத்தம் 41 நாடுகள் இ- பாஸ்போர்ட் முறைக்கு மாறிவிட்டன. வளரும் நாடுகளில் இத்தகைய நவீனத்திற்கு மாறியுள்ள நாடுகளில் முதலிடத்தை இந்தியா பிடித்துள்ளது.