இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுப் பலன்களில் இருந்து நீக்கப்பட உள்ள கிரீமி லேயர் பிரிவினருக்கான அதிகபட்ச ஆண்டு வருமானம் 4 முதல் 6 லட்சம் ரூபாய் என்று தேசியப் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இந்த வருமான வரம்பு கடந்த ஆண்டு ஆண்டிற்கு ரூ.2.5 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேசியப் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் தனது பரிந்துரைகளை நாளை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது என்று அரசு வட்டாரங்கள் கூறியதாக யு.என்.ஐ. செய்தி தெரிவிக்கிறது.
ஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் நாளை மதியம் மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் மீரா குமாரைச் சந்தித்துத் தனது பரிந்துரைகளை வழங்க உள்ளனர்.
இந்த விடயத்தில் மாநில ஆணையங்களின் பரிந்துரைகளைப் பரிசீலித்த பிறகே தேசிய ஆணையம் வருமான வரம்பினை நிர்ணயித்தது என்றும் அவ்வட்டாரங்கள் கூறியுள்ளன.
முன்னதாக, கிரீமி லேயருக்கான வருமான வரம்பு விடயத்தில் இறுதி முடிவெடுப்பதற்காக மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையங்களின் தலைவர்கள், செயலர்கள் கூட்டத்தினை தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இம்மாதத் துவக்கத்தில் கூட்டியது குறிப்பிடத்தக்கது.
வருமான வரம்பை மாற்றியமைப்பது தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களையும் ஆணையம் கடந்த மாதம் கோரியிருந்தது.
மத்திய அரசு நடத்தும் உயர் கல்வி நிறுவனங்களில் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அந்த ஒதுக்கீட்டுப் பலன் பெறுவோர் பட்டியலில் கிரீமி லேயரை நீக்குமாறு அரசுக்கு பரிந்துரைத்ததை அடுத்து, கிரீமி லேயருக்கான வருமான வரம்பை உயர்த்துமாறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.