ஐ.மு.கூ.- இடதுசாரிகள் உயர்மட்டக் குழுக் கூட்டத்திற்கு முன்பு இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு விடயமாக சர்வதேச அணுசக்தி முகமையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான அரசின் முயற்சிகளுக்கு மூத்த விஞ்ஞானிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
"தனித்த கண்காணிப்பு உடன்பாட்டின் முக்கிய அம்சங்களின் மீது நமது நாட்டிற்குள் முழுமையாக விவாதம் நடத்தப்படாமல், அல்லது குறைந்தபட்சம் ஐ.மு.கூ.- இடதுசாரிகள் உயர்மட்டக் குழுவிலாவது விவாதிக்காமல், தற்போது இறுதி செய்யப்பட்டுள்ள கணிகாணிப்பு உடன்பாட்டின் வரைவிற்கு சர்வதேச அணுசக்தி முகமையின் ஒப்புதலைப் பெறும் அரசின் முயற்சிகளை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்" என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் பி.கே. ஐயங்கார், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏ.கோபாலகிருஷ்ணன், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் ஏ.என்.பிரசாத் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில், தனித்த கண்காணிப்பு உடன்பாடு குறித்து வல்லுநர்கள் குழுவுடனும் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அணுசக்தி உடன்பாடு மீது விவாதிக்க அமைக்கப்பட்டுள்ள ஐ.மு.கூ- இடதுசாரி உயர்மட்டக் குழுவிற்கு கூடத் தெரிவிக்காமல், சர்வதேச அணுசக்தி முகமையுடனான தனித்த கண்காணிப்பு உடன்பாட்டை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு அவசரப்படுவது குறித்து விஞ்ஞானிகளிடையில் கவலை நிலவுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.