காஷ்மீர், பயங்கரவாதம், இருதரப்பு நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சிகள் ஆகியவற்றின் மீது இந்திய - பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர்கள் வரும் வெள்ளிக்கிழமை விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
பாகிஸ்தானில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதையடுத்து கடந்த மாதம் அந்நாட்டிற்குச் சென்ற அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷியுடன் பேசினார். இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சனைகளுக்கு இணக்கமான தீர்வு காணத் தயார் என்று அப்போது அந்நாட்டு அயலுறவு அமைச்சர் கூறினார்.
காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வாக எந்த ஒரு புதிய திட்டத்தை இந்தியா அளித்தாலும் அதன் மீது விவாதிக்கத் தயார் என்று கூறிய குரேஷி, இறுதித் தீர்வை காஷ்மீர் மக்களின் நிலையையும் கருத்தில் கொண்டு ஐ.நா. சபையின் ஒப்புதலுடன்தான் நிறைவேற்றவேண்டும் என்பதுதான் புதிய அரசின் நிலைப்பாடு என்று கூறியிருந்தார்.
இந்தப் பின்னணியில் இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வரும் வெள்ளிக் கிழமை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தியா வரும் பாகிஸ்தான் அயலுறவு அமைச்சருடன் பிரணாப் முகர்ஜி பேசுகிறார்.
ஸ்ரீநகருக்கும், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியின் தலைநகரான முசாஃபராபாத்திற்கும் இடையே சரக்கு வாகன போக்குவரத்து தொடங்குவது, கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இரு தரப்பு மக்களுக்கு இடையே மேலும் பல போக்குவரத்துப் பாதைகளை திறப்பது ஆகியன குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.