அதிகரிக்கும் பணவீக்கம்தான் நமது நாட்டின் முக்கியப் பிரச்சனையே தவிர, அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு அல்ல என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன் கூறியுள்ளார்.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டிற்காக அரசைத் தியாகம் செய்யும் முடிவிற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி செல்லக் கூடாதென்றும், முன்கூட்டியே தேர்தல் வருவதை மக்களைப் பிரிக்கும் சக்திகளைத் தவிர வேறு யாரும் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
புவனேஷ்வரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நிறைவேற்றுவதற்கு அரசு ஏன் இப்படி அவசரப்படுகிறது என்று தெரியவில்லை. இது மன்மோகன் சிங்கிற்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சிற்கும் இடையிலான உடன்பாடு அல்ல. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உடன்பாடு என்பதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.
அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை தொடர்ந்து நாங்கள் எதிர்த்தாலும், வருகிற ஐ.மு.கூ. - இடதுசாரி உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் எங்கள் கருத்தை ஐ.மு.கூட்டணிக்கு புரிய வைக்க முயற்சிப்போம் என்றார் பரதன்.